ஸ்ரீவி., பெரியாழ்வார் சன்னதி தங்க கொடிமர கும்பாபிஷேகம்!
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி பெரியாழ்வார் சன்னதி தங்க கொடிமரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்குட்பட்ட வடபத்ரசாயிகோயில் பெரியாழ்வார் சன்னதியில், ஏற்கனவே இருந்த கொடி மரம் கடந்த சில மாதங்களுக்கு முன் அகற்றப்பட்டு, 33 அடி உயரம் கொண்ட கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதற்கு ரூ.40 லட்சம் செலவில் தங்க தகடு பதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கொடிமரத்திற்கான கும்பாபிஷேகம் நேற்று காலை நடந்தது.இதையொட்டி நேற்று முன் தினம் இரவு முதல் யாகசாலை பூஜை, நேற்று அதிகாலை நான்கு மணிக்கு இரண்டாம் யாக சாலை பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு வாசன்பட்டர் தலைமையில் கொடிமரத்தில் புனித நீர் ஊற்ற,கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னம் முத்திரை பொறித்த கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை நடந்தது. தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் பொறுப்பு வேல் முருகன், ஸ்தானிகம் ரமேஷ், வேதபிரான் பட்டர் சுதர்சனன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.