மாசி மக உற்சவத்திற்கு அனுமதி
வாலாஜாபாத் : மாசி மக உற்சவம் நடத்துவதற்கு, பல நிபந்தனைகளுடன், மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
வாலாஜாபாத் அடுத்த, இளையனார்வேலுார் பாலசுப்ரமணிய சுவாமி, ஆண்டுதோறும் மாசி மகம் அன்று, திம்மராஜம்பேட்டை கிராமத்தில் இருக்கும், சுங்குவார்தோப்பு உற்சவத்தில் எழுந்தருளுவார்.இந்த விழா மற்றும் வீதி உலாவை, வரும், 23 முதல், மார்ச், 3ம் தேதி வரை நடத்த, கோவில் நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரியது. இதையடுத்து, பல நிபந்தனைகளுடன், விழா நடத்த, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், 50 சதவீத இருக்கைகளுடன் கூடிய, 600 நபர்கள் மட்டும் கூடும் அளவிற்கு இருக்க வேண்டும். முக கவசம் மற்றும் சமூக இடைவெளி கடைப் பிடிக்க வேண்டும். விழா நடைபெறும் இடங்களில், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க கூடாது. செயல் அலுவலர், கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.போக்குவரத்துக்கு இடையூறு இன்றி விழா நடத்தி கொள்ளலாம் என்பன போன்ற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டு உள்ளன. வரதர் தெப்பத்திற்கும் அனுமதிவாலாஜாபாத் அடுத்த, தென்னேரி மற்றும் ராஜகுளம் கிராமத்தில், வரதராஜ பெருமாள் தெப்போற்சவம் நடைபெறும். கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், இரு கிராமங்களிலும் நடைபெறும் தெப்போற்சவத்திற்கு, நிபந்தனைகளுடன், கலெக்டர் அனுமதி வழங்கியுள்ளார்.அதன்படி, வரும், -22ம் தேதி, தென்னேரி கிராமம் தாதசமுத்திரத்தில், 96வது ஆண்டு தெப்போற்சவம் மற்றும் -27ல், மாசி மகத்தன்று, ராஜகுளம் கிராமத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.