கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
ADDED :1731 days ago
புதுச்சேரி; மாசி மக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருக்காஞ்சி கங்கவராக நதீஸ்வரர் கோவிலில் நேற்று கொடியேற்றப்பட்டது.வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சியில், பிரசித்தி பெற்ற கங்கவராக நதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம், நேற்று முன்தினம் கணபதி ஹோமம், கணேசர் உற்சவத்துடன் துவங்கியது.நேற்று காலை 10:00 மணிக்கு மேல், 11:30 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில் தினசரி காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் வீதியுலா நடக்கிறது.தேர்த் திருவிழா வரும் 25ம் தேதியன்றும், மாசிமக தீர்த்தவாரி 26ம் தேதியன்றும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்காஞ்சி கிராம மக்கள் செய்துள்ளனர்.