ராமர் கோயில் அறக்கட்டளை அறிவிப்பு
அயோத்தி:அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு வெள்ளிக் கற்களை அனுப்ப வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்குள்ள அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டும் பணி நடக்கிறது. இக் கோவிலுக்கு நாடு முழுதும் நன்கொடை திரட்டப்படுகிறது. இதுவரை 1.50 லட்சம் குழுக்கள் வாயிலாக 1600 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது.இக்கோவிலின் கட்டுமானத்திற்கு ஏராளமானோர் வெள்ளிக் கற்களை அனுப்பி வருகின்றனர். இந்த வெள்ளிக் கற்களை பத்திரமாக பராமரிக்க போதிய இடவசதி இல்லை என்பதால் அவற்றை அனுப்ப வேண்டாம் என ராமர் கோவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.இது குறித்து அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஷ்ரா கூறியதாவது:ராமர் கோவிலுக்கு இதுவரை 400க்கும் அதிகமான வெள்ளிக் கற்கள் நன்கொடையாக வந்துள்ளன. அவற்றை வங்கி லாக்கர்களில் வைத்துள்ளோம். இனி வெள்ளி கற்களை பாதுகாக்க லாக்கர்களில் இடமில்லை.அதனால் பக்தர்கள் இனி வெள்ளிக் கற்களை அனுப்ப வேண்டாம். அவற்றை பாதுகாக்கவே அதிகம் செலவு செய்ய நேரும். வெள்ளி கற்கள் தேவைப்படும்போது அது குறித்த அறிவிப்பை வெளியிட்டு பெற்றுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.