தேவி கருமாரியம்மன் ராஜகோபுர மகா கும்பாபிஷேகம்
ஆதம்பாக்கம்; தேவி கருமாரியம்மன் கோவில் ராஜகோபுர, மகா கும்பாபிஷேகம், நேற்று விமர்சையாக நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சென்னை, மேற்கு வேளச்சேரி, ஆதம்பாக்கம், சாஸ்திரி நகரில், தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ராஜகோபுரம் அமைத்து, புனரமைக்கப்பட்டது.இதையடுத்து, அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னட்டு, 22ம் தேதி முதல், யாக சாலை வளர்த்து, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.அதைத் தொடர்ந்து, வாஸ்து சாந்தி, மிருத்யுசங்ஹரனம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாக சாலை பிரவேசம் உள்ளிட்ட முக்கிய பூஜைகள் நடந்தன.கும்பாபிஷேக நாளான நேற்று, காலை, 7:30 மணிக்கு, நான்காம் கால பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை, 10:45 மணிக்கு, மகா பூர்ணாஹுதி நடந்தது.காலை, 11:15 மணிக்கு, கடப்புறப்பாடு நடந்து, ராஜாகோபுர விமானம், மூலஸ்தானம் ஆகியவற்றின் கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டது. பின், அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று மாலை, 6:30 மணிக்கு விசேஷ சந்தனகாப்பு அலங்காரம், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் வீதி உலாவும் நடந்தது.இன்று முதல், 48 நாட்கள் மண்டலாபிஷேக பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் தலைவர் முருகன் தலைமையில், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.