உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளித்தேரில் பவனி

காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளித்தேரில் பவனி

 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் கோவில் பிரம்மோற்சவத்தின், ஒன்பதாம் நாள் உற்சவத்தில், காமாட்சி அம்மன், வெள்ளித்தேரில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகளில், பவனி வந்தார்.

காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் கோவில் பிரம்மோற்சவம், கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இதில், தினமும் காலை, மாலையில், பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளில் உலா வந்தார்.ஒன்பதாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, வெள்ளித்தேர் உற்சவம் நடந்தது. இதில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில், மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன், வாண வேடிக்கை முழங்க, மேளதாளங்கள் ஒலிக்க, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, இரவு, 9:30 மணிக்கு, தேர் அசைந்து ஆடியபடி புறப்பட்டது. நான்கு ராஜ வீதிகளிலும், தேரில் பவனி வந்த காமாட்சி அம்மனை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். நாளை காலை, 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !