திருமூர்த்தி அணையில் புதைந்துள்ள சிலைகளை பராமரிக்க வலியுறுத்தல்!
உடுமலை: உடுமலை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளை உள்ளடக்கிய சுற்றுப்பகுதிகள் பழங்காலத்தில் தளி பாளையக்காரர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்பகுதி மக்களின் திருவிழாக்கள் மற்றும் பல்வேறு விளையாட்டுகள் நடத்தப்படும் இடமாக திருமூர்த்திமலை அடிவாரத்திலுள்ள பாலாறு கரை இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் தளி பாளையக்காரர்கள் கொல்லப்பட்டு தளியில் இருந்த கோட்டை முற்றிலுமாக இடிக்கப்பட்டது. கோட்டையின் இடிபாடுகள் தற்போதும் அப்பகுதியில் காணப்படுகிறது. இதே போல், பாளையக்காரர்களின் பாலாற்று கரை கோவிலும் இடிக்கப்பட்டது. இந்நிலையில், பாலாற்றின் குறுக்கே திருமூர்த்தி அணை கட்டப்படும் போது பாளையக்காரர்கள் திருவிழாக்களை நடத்தி வந்த இடத்தில், பல்வேறு வரலாற்று சின்னங்களும், அவர்களது முன்னோர்களது சிலைகளும் கண்டறியப்பட்டன. 20க்கும் மேற்பட்ட சிலைகள் அணை கட்டுமான பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது காண்டூர் கால்வாய் திருமூர்த்தி அணையை அடையும் பகுதியில் வைத்து பொதுப்பணித்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளின் போது புதையுண்ட தளி பாளையக்காரர்களின் பல சிலைகள் கிடைக்கவில்லை. இவ்வாறு, அணை நீர் தேக்க பகுதிக்குள் புதைந்திருந்த சிலைகள் இயற்கை சீற்றங்கள் மற்றும் மாற்றங்களால் அணையின் கரைப்பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. திருமூர்த்தி அணையின் நீர் மட்டம் 30 அடிக்கு கீழே செல்லும் போது படகு துறை அருகேயுள்ள பகுதியில் பல்வேறு சிலைகள் பார்வைக்கு தெரிகின்றன. இதில், பாளையக்காரர்களின் சிலைகள் இரண்டும், சில கடவுள் சிலைகளும் மண் மேட்டில் காணப்படுகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் மட்டும் வெளிப்படும் இந்த சிலைகளை சுற்றுப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டுமுழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் சிலைகள் சிதிலமடைந்து வருகிறது. எனவே சிலைகளை அருங்காட்சியகத்திற்கு எடுத்து சென்று பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தளி பகுதி மக்கள் கூறுகையில்.. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட தளி பாளையக்காரர்களின் பல்வேறு சின்னங்கள் பராமரிப்பில்லாமல் அழிந்து வருகிறது. திருமூர்த்தி அணைப்பகுதியில் காணப்படும் சிலைகளை மணி மண்டபம் அமைத்து பராமரிக்க வண்டும் என்ற கோரிக்கை குறித்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அணை நீர்தேக்க பகுதியில் சிதிலமடைந்து வரும் சிலைகளை அருங்காட்சியகத்திற்கு எடுத்து செல்வதால் அவை பாதுகாக்கப்படும், என்றனர்.