உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

நாமக்கல்: கூலிப்பட்டி பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிப்பட்டனர். நாமக்கல் அடுத்த கூலிப்பட்டியில் பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கணபதி, கனக மாரியம்மன், பகவதி அம்மன், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் திருப்பணியும், முன் மண்டப அமைக்கும் பணியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. திருப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், கடந்த 2ம் தேதி காலை மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, சங்கல்பம், வாஸ்து சாந்தி, தீபாராதனை நடந்தது. 3ம் தேதி கணபதி, மகாலட்சுமி ஹோமம், அஷ்டபந்தனம், பிரதிஷ்டை பூஜையும், அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு மண்டப பூஜை, நாடி சந்தானம், தீபாராதனை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு பிடாரி அம்மன் கோவில் கும்பாபிஷேகமும், காலை 6 மணிக்கு கடம் புறப்பாடு, கனக மாரியம்மன், பகவதி அம்மன் கோவில் மற்றும் அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை, ஸ்வாமி தரிசனம் நடந்தது. விழாவில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் காந்திச்செல்வன், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !