உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவில் விழாவில் பரணை ஏறல் நிகழ்ச்சி!

பத்ரகாளியம்மன் கோவில் விழாவில் பரணை ஏறல் நிகழ்ச்சி!

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே பத்ரகாளியம்மன் கோவில் விழாவில், பரணை ஏறல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. போச்சம்பள்ளியை அடுத்த விளங்காமுடி கோடிப்புதூர் தென்பெண்ணை ஆற்றங்கரையில் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி கடைசி வாரத்தில் ஐந்து நாட்கள் திருவிழா நடக்கும். திருவிழாவின் முதல்நாளான கடந்த 4ம் தேதி கொடியேற்றம் நடந்தது. 5ம் தேதி இரவு பேய் ஓட்டுதல், வாண வேடிக்கை நடந்தது. மூன்றாம் நாளான நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்சியான பரணை ஏறுதல் நடந்தது. உயிருடன் பரண் மீது கட்டப்பட்ட ஆடு மற்றும் பன்றியின் நெஞ்சை பிளந்து அதில் வாழை பழ துண்டுகள் போட்டு சாமியாடி ரத்தம் கலந்த வாழை பழத்தை சாப்பிட்டு கீழே இருந்த பக்தர்களுக்கு வீசினார். இந்த பழத்துண்டு கிடைத்தவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். நேர்த்தி கடனாக பக்தர்கள் கோவில் வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு அங்கேயே உறவினர்களுடன் சமைத்து சாப்பிட்டனர். மேலும் கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட 500க்கும் மேற்பட்ட பன்றிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு ஒரே இடத்தில் வைத்து பலியிட்டு பங்கு போட்டு கறியை விற்பனை செய்தார்கள். இன்று இரவு மஞ்சள் நீராட்டு விழாவும், இறுதி நாளான நாளை (ஜூன் 8) பூ மாலை அகற்றும் நிகழ்ச்சி, சிறப்பு அபிசேகம், அலங்காரம், பூஜைகளுடன் விழா நிறைவு பெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !