உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தர்மலையில் அகற்றிய லிங்கம் மீண்டும் பிரதிஷ்டை

சித்தர்மலையில் அகற்றிய லிங்கம் மீண்டும் பிரதிஷ்டை

பெரும்பாக்கம், சித்தர் மலையில் இருந்த சிவ லிங்கத்தை, வனத்துறையினர் பெயர்த்து எடுத்து சென்றதால், பெரும் பிரச்னை வெடித்தது. ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்பினர் நடத்திய போராட்டத்திற்கு பின், லிங்கம் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சென்னை, மேடவாக்கம் அடுத்த அரசன்கழனி, பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம், நுக்கம்பாளையம் நடுவே, சிறிய மலை உள்ளது. அது, சித்தர் மலை எனவும் அழைக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கு முன், அந்த மலை மீது ஆடு, மாடு மேய்க்க சென்றவர்கள், மலை உச்சியில் புதைந்திருந்த சிவ லிங்கத்தை கண்டு, ஊர் பெரியவர்களிடம்தகவல் கொடுத்தனர்.அங்கு சென்ற ஊர்மக்கள், மலையில் ஏற்கனவே சிவன் கோவில் அமைந்திருக்கலாம், இயற்கை சீற்றத்தால் அது அழிந்திருக்கலாம் என கருதினர். பின், அந்த சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தி வந்தனர். இந்நிலையில், மேலும், இரண்டு சிவ லிங்கங்களும், அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டன. அதற்கு, கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் என பெயரிட்டு வழிபாடு நடந்தது. பிரதோஷம், சிவராத்திரி விழா விமரிசையாக நடத்தப்படுகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக அந்த மலையை சுற்றி, பக்தர்கள் கிரிவலம் வர ஆரம்பித்தனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அந்த மலையின் கீழ் பகுதியில், சர்ச் கட்டப்பட்டது. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து, சர்ச் கட்டப்பட்டதாகவும் அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கிரிவலம் செல்லும் பக்தர்களை, சர்ச் உறுப்பினர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு எழந்தது.

சமீபத்தில், மகா சிவராத்திரி அன்று ஏராளமான பக்தர்கள், பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். நுாற்றுக்கணக்கானோர் கிரிவலமும் சென்றுள்ளனர்.இந்நிலையில், திடீரென வனத்துறையைச் சேர்ந்த அலுவலர் அலெக்சாண்டர் என்பவர், மலையில் இருந்து சில லிங்கத்தை பெயர்த்து எடுத்து சென்றுள்ளார். இத்தகவல், காட்டு தீயாக பரவியது. மலைக்கு கீழ் உள்ள சர்சுக்கு ஆதாரவாக, சிவ லிங்கம் அகற்றப்பட்டதாகக் கூறி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பினர் வனத்துறையை முற்றுகையிட்டு கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பக்தர்களும் பங்கேற்றனர். தகவல் அறிந்த போலீசார், அங்கு விரைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.இதையடுத்து, சிவ லிங்கம் வழங்கப்பட்டு, மலையில் பிரதிஷ்டை செய்யவும், வழிபாடு நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.லிங்கத்தை பெற்ற பக்தர்கள், மீண்டும் மலையில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தினர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்னைக்கு தீர்வு: போலீசார் தரப்பில் கூறிய தாவது:சம்பந்தப்பட்ட மலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, புதிதாக ஏதேனும் சிலை வைத்தால், அனுமதி பெற வேண்டும். ஆனால், வனத்துறை அனுமதி இல்லாமல், புதிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனவே, வனத்துறையினர் லிங்கத்தை கொண்டு சென்றனர். தற்போது, மீண்டும் அங்கேயே லிங்கம் வைக்க அனுமதி வழங்கியதால், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

வரலாற்றை கண்டறிய வேண்டும்!: சித்தர் மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் குறித்தும், அம்மலை மற்றும் லிங்கத்தின் வரலாற்றை கண்டறியப்பட வேண்டும் எனவும், ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, ஆன்மிகவாதிகள் கூறியதாவது:தமிழகத்தின் தொண்டை மண்டலம், சிவஞானம் விளைந்த பூமியாக திகழ்கிறது. அதிலும், தென்சென்னை பகுதி, சித்தர்கள் இருப்பிடமாக திகழ்ந்து உள்ளது.பெரும்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள சித்தர் மலையில், இன்றும் சித்தர்கள் வந்து செல்வதாக நம்பப்படுகிறது.சித்தர்களின் இருப்பிடமாக இருந்த அந்த இடம், சித்தர்பாக்கம் என அழைக்கப்பட்டது.

பின்னாளில், இது மருவி, சித்தாலப்பாக்கம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சித்தர்கள், ஞானிகள் சிவபூஜை செய்ய, பெரிய சோலையாகிய நந்தவனத்திற்குச் சென்று பூக்கள் பறித்து வந்ததால், அந்த இடம் சோலையூர் என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் அது சேலையூராக மருவியது.

கபில முனிவர் பூஜித்த மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர்; அதனருகில், 18 சித்தர்களுக்கும் கோவில்; ஆயிரம் ஆண்டுகள் பழமையான பள்ளிக்கரணை அகத்தீஸ்வரர்; அரசன்கழனி பசுபதீஸ்வரர்; ஒட்டீஸ்வரர் கோவில் என, இந்த மலையை சுற்றி ஏராளமான சிவன் கோவில்கள் அமைந்துள்ளன. எனவே, அந்த சித்தர் மலையில் கண்டு எடுக்கப்பட்ட சிவ லிங்கம், மிகவும் பழமை வாய்ந்தது. அதன் வரலாற்றை கண்டறிய வேண்டும். சித்தர்களால் பூஜிக்கப்பட்டதாக கருதப்படும் அந்த இடத்தில், கோவில் கட்ட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- -நமது நிருபர்- -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !