தெலுங்கானாவில் பிரமாண்டம் : திருப்பதிக்கு போட்டியாக கோவில்
திருப்பதியின் திருமலை கோவிலுக்கு போட்டியாக, தெலுங்கானாவில், 1,000 ஆண்டுகள் பழமையான குடைவரை கோவில் ஒன்று, மிக பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி திருமலை கோவில், உலக பிரசித்தி பெற்றது. தெலுங்கானாவிலும், அதேபோன்ற ஒரு கோவிலை கட்டமைக்கவேண்டும் என்ற, முதல்வர் சந்திரசேகர ராவின் கனவு, விரைவில் நனவாக உள்ளது.தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், லட்சுமி நரசிம்மரின் குடைவரை கோவில் உள்ளது. தலைநகர் ஐதராபாதில் இருந்து, 70 கி.மீ., தொலைவில், குன்றின் மேல் அமைந்துள்ள இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில், மிகவும் பிரமாண்டமான முறையில் புனரமைக்கப்பட்டு வருகிறது. 2016ல் துவங்கப்பட்ட, இந்த கோவில் புனரமைப்பு பணிக்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த வைணவத் திருக்கோவிலை புனரமைக்கும் பணிகளில், இரவு பகல் பாராமல், நுாற்றுக்கணக்கான சிற்பிகளும், கலைஞர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொறியாளர்கள், பொதுத் துறை அதிகாரிகளும், இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 14.5 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்துள்ள இந்த கோவிலில், ஏழு கோபுரங்கள் உள்ளன. பிரதான ராஜ கோபுரம், 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுஉள்ளது.கோவில் குளம், மொட்டை அடிக்கும் மண்டபம், கோவிலை சுற்றியுள்ள சாலைகள், பிரசாதம் வினியோகிக்கும் வளாகம் உள்ளிட்டவை, இம்மாதத்திற்குள் புனரமைக்கப்பட்டுவிடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில் முழுதும் புனரமைக்கப்பட்டு, மே மாதம், முதல் வாரத்தில், குடமுழுக்கிற்கு தயாராகிவிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.இதேபோல், யாத்ரீகர்கள் தங்குவதற்கான, காட்டேஜ்கள், கார் நிறுத்துவதற்கான வசதி, கோவில் குருக்களுக்கான வீடுகள் உள்ளிட்டவற்றை கட்டமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.