தாயமங்கலம் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியதை அடுத்து வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.கடந்தாண்டு திருவிழா நடைபெறாத நிலையில் இந்தாண்டு பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.அம்மனுக்கு அபிேஷக, ஆராதனை, அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கொடி மரத்தில் பூஜாரிகள் கொடியேற்றினர். வெளியூர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா வருகிற 30 ந் தேதியும்,மின் விளக்கு அலங்கார தேர் பவனி 31 ந் தேதியும் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் 2ந்தேதி தீர்த்த வாரியுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.திருவிழாவிற்காக காரைக்குடி, மதுரை, அருப்புகோட்டை, திண்டுக்கல், பரமக்குடி, இளையான்குடி, மானாமதுரை ஆகிய பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் விதத்தில் பக்தர்களுக்கு இலவச மாஸ்க்,சானிடைசர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 6க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன் செய்து வருகின்றார்.