சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தேர்திருவிழா
ரிஷிவந்தியம் : சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி தேர் திருவிழா நேற்று நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சியில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியசுவாமி கோவிலில், கடந்த 19ம் தேதி காப்பு கட்டுதலுடன் பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் தினமும் காலை, மாலை நேரங்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது.உற்சவர் சுப்ரமணிய சுவாமியை சிறிய தேரில் வைத்து, பக்தர்கள் கோவிலை சுற்றி வந்தனர். 26ம் தேதி இரவு சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்ததை தொடர்ந்து, நேற்று தேர்திருவிழா விமர்சையாக நடந்தது. நேற்று காலை பூஜைகள் செய்யப்பட்டு, 11:00 மணிக்கு தேர் புறப்பட்டது. பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்து சென்றனர். ஊரில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாக வலம் வந்து, மாலை 5:00 மணிக்கு கோவிலுக்கு வந்தடைந்ததும், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இன்று அலகுகுத்துதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.