ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் பங்குனி உத்திர திருவிழாவான நேற்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.
மார்ச் 20ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒன்பதாவது நாளான நேற்று காலை 10:00 மணிக்கு ஆண்டாள் கோயில் மரியாதையுடன் கோட்டை தலைவாசல் ரேணுகாதேவி கோயிலில் இருந்து திருக்கல்யாண பட்டுபுடவை, வேட்டிகள், திருமாங்கல்யம் பெற்று கோயிலுக்கு கொண்டு வரபட்டது.மதியம் 3:00 மணிக்கு ரெங்கமன்னார் வீதிபுறப்பாடும், பெரியாழ்வார் வேதபிரான் திருமாளிகையில் எழுந்தருளி சாமவர்தன தேங்காய் பெறுதலும், பூரண கும்ப மரியாதையுடன் ரெங்கமன்னாரை எதிர்கொண்டு அழைத்தலும், அதனையடுத்து அங்கமணிகளுடன் ஆண்டாள் புறப்படுதல், மாலை மாற்றுதல் நடந்தது.
பின் ஆடிப்பூரபந்தலில் பெரியாழ்வார் முன்னிலையில் மணமேடையில் ஆண்டாள், ரெங்கமன்னார் மணக்கோலத்தில் எழுந்தருளினர். இரவு 7:05 மணிக்கு பட்டர்கள்விவாக ேஹாமங்கள் நடத்தினர். ரெங்கமன்னார் திருக்கரங்களில் மங்கலநாண் தொட்டு, ஆண்டாளுக்கு திருமாங்கல்ய தாரணம் செய்விக்கபட்டது.திருப்பதி கோயிலில்இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு ஆண்டாளுக்கு சாற்றபட்டது. ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன்ஆண்டாள், ரெங்கமன்னாரை வணங்கினர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்தனர். ஏப்.1ல் மாலை புஷ்ப யாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.