திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா: இன்று தீர்த்த உற்ஸவம்
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று(ஏப்.,1) நடந்தது. நான்கு மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மலையை சுற்றி தேர் வலம் வந்தது. இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.
சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவின் 14ம் நாள் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடந்தது. காலை 5:30 மணிக்கு உற்ஸவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பச்சை மற்றும் சிவப்பு பட்டால் பரிவட்டம் கட்டப்பட்டு, கோயில் முன்பு நிலை நிறுத்தப்பட்டிருந்த பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர்.காலை 6:24 மணிக்கு நிலையிலிருந்து புறப்பட்ட தேர் நான்கு மணிநேரம் கிரிவலப் பாதையில் பக்தர்கள் வெள்ளத்தில் நகர்ந்து வலம் வந்து, காலை 10:40 மணிக்கு நிலை நிறுத்தப்பட்டது. பின்பு கோயில் நடை திறந்து சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.இரவு தங்க மயில் வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சியில் சுவாமி, தெய்வானை அருள்பாலித்தனர். இன்று தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.