உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேர்தல் நாளிலும் ஐயப்பனை விட்டு வைக்காத கேரள கட்சிகள்

தேர்தல் நாளிலும் ஐயப்பனை விட்டு வைக்காத கேரள கட்சிகள்

திருவனந்தபுரம்: கேரளாவில் தேர்தல் நாளன்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் சபரிமலை ஐயப்பனை ஒரு விவாதப் பொருளாக்கி விட்டனர். முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா, முன்னாள் முதல்வர்கள் உம்மன் சாண்டி, ஏ.கே. அந்தோணி உட்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் சபரிமலை கோயில் விவகாரம் குறித்து மாறிமாறி கருத்து தாக்குதல் நடத்தினர்.கேரளாவில் கடந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும் இடது முன்னணியால் வெற்றி பெற முடிந்தது. கம்யூனிஸ்டு கட்சிகளின் இந்த படுதோல்விக்கு சபரிமலை கோயில் விவகாரம் தான் முக்கிய காரணம். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இளம்பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை 2018ல் உச்சநீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து அரசின் ஆதரவுடன் போலீஸ் பாதுகாப்புடன் 2 இளம்பெண்கள் சபரிமலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்கள் தவிர மேலும் பல இளம் பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் ஹிந்து அமைப்பினரின் கடும் எதிர்ப்பால் அவர்களால் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.இதைக் கண்டித்து கேரளாவில் வரலாறு காணாத கடும் வன்முறை வெடித்தது. மார்க்சிஸ்ட் கூட்டணி அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து பா.ஜ., காங்கிரஸ் உட்பட கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ். உட்பட அமைப்பினரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். உச்சநீதிமன்ற உத்தரவைத் தான் அமல்படுத்தினோம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். லோக்சபா தேர்தல் முடியும் வரை சபரிமலை கோயில் விவகாரத்தில் தாங்கள் எடுத்த முடிவு தான் சரியானது என்று பினராயி விஜயன் உட்பட கம்யூனிஸ்ட் கட்சியினர் கூறிவந்தனர்.ஆனால் தேர்தலில் படுதோல்வி கிடைத்த பின்னர் சபரிமலை விவகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சியினர் கிடப்பில் போட்டனர். இளம்பெண்களை தரிசனத்திற்கு கொண்டு செல்வதற்கு முதலில் காட்டிய ஆர்வம் பின்னர் குறைந்தது. தரிசனத்திற்கு இளம்பெண்கள் சென்ற போதிலும் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதனால் இரு ஆண்டுகளாக சபரிமலையில் அமைதி நிலவி வருகிறது.இந்நிலையில் சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் சபரிமலை விவகாரம் மீண்டும் சூடு பிடித்தது.கேரள அறநிலையத் துறை அமைச்சரான கடகம்பள்ளி சுரேந்திரன் இம்முறை திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள கழக்கூட்டம் தொகுதியில் போட்டியிடுகிறார்.சில வாரங்களுக்கு முன் அவர் சபரிமலை விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னைகளுக்காக பக்தர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என கூறினார். தேர்தல் நெருங்கி வருவதால் ஓட்டுக்காகவே அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இவ்வாறு கூறுவதாக பா.ஜ.வினர் தெரிவித்தனர். தேர்தல் நாளான நேற்றும் கேரளாவில் சபரிமலை ஐயப்பன் குறித்துத் தான் விவாதிக்கப்பட்டது. நாயர் சமூக அமைப்பின் பொது செயலாளரான சுகுமாரன் என்பவர் தான் இந்த விவகாரத்தை முதலில் கொளுத்திப் போட்டார். சில ஆண்டுகளாகவே ஐயப்ப பக்தர்களின் மனதில் இந்த அரசு மீது கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது. அது இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றார்.இதற்கு உடனடியாக முதல்வர் பினராயி விஜயன் பதிலடி கொடுத்தார். ஐயப்பன் மட்டுமில்லை இந்த நாட்டிலுள்ள எல்லா தெய்வங்களும் இந்த அரசுடன் தான் இருக்கிறது. ஏனென்றால் இந்த அரசு தான் மக்களை பாதுகாத்து வருகிறது. மக்களை பாதுகாப்பவர்களுடன் தான் தெய்வங்களும் இருக்கும் என்று கூறினார். பினராயி விஜயனின் இந்தக் கருத்துக்கு கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, ஏ.கே. அந்தோணி, சசிதரூர் எம்.பி. உட்பட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.ரமேஷ் சென்னித்தலா கூறுகையில் தெய்வ நம்பிக்கை இல்லாத பினராயி விஜயன் இப்போது ஐயப்பனின் காலை பிடிக்கிறார். இதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். ஐயப்ப பக்தர்களின் மனதில் காயத்தை ஏற்படுத்திய இந்த அரசு மீது தெய்வ கோபமும் மக்கள் கோபமும் கண்டிப்பாக இருக்கும் என்றார். சசிதரூர் எம்.பி. கூறுகையில் சபரிமலை குறித்தும் ஐயப்பன் குறித்தும் தேர்தல் நாளன்று கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இல்லை. போலீஸ் அணியும் ஹெல்மெட் கவச உடை ஆகியவற்றைக் கொடுத்து சன்னிதானம் வரை இளம்பெண்களை கொண்டு சென்ற அன்று அதெல்லாம் தவறு என்று தெரிந்திருந்தால் கேரளாவில் அவ்வளவு பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது. வாக்காளர்களை ஏமாற்றுவதற்காகவே தேர்தல் தினத்தில் பினராயி விஜயன் நாடகமாடுகிறார் என்றார்.முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி கூறுகையில் சபரிமலை விவகாரத்தால் கோபத்தில் இருக்கும் பக்தர்களுக்கு பயந்து தான் பினராயி விஜயன் பல்டியடித்துள்ளார். காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சபரிமலை கோயில் ஆச்சாரத்தை பாதுகாப்பதற்கு சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !