அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி விழா
அச்சிறுபாக்கம்: அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா விமரிசையாக நடந்தது. அச்சிறுபாக்கத்தில் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது.
நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி மூலவரான ஆட்சீஸ்வரருக்கு நான்கு கால பூஜைகள் நடந்தன. இதில், ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆத்துார் முக்தீஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி விழா நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் கிராமத்தில், ஸ்ரீ தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ஸ்ரீ முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மஹா சிவராத்திரி விழா, நேற்றுமுன்தினம் சிறப்பு யாகத்துடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு, முக்தீஸ்வரருக்கு 21 திரவியம் கொண்ட முதல்கால பூஜை துவங்கி, ஆறு கால பூஜை, நேற்று அதிகாலை 4:00 மணிவரை, நடைபெற்றது. சந்திரசேகர் சுவாமி மலர் அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா நடைபெற்றது. காலை 6:00 மணிக்கு, கோ பூஜையுடன் நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை, ஆத்துார் ஸ்ரீ முக்தீஸ்வரர் சேவா டிரஸ்ட் செய்திருந்தனர்.
செய்யூர் அடுத்த முகையூர் கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் பழமையான சொர்ணாம்பிகை உடனுறை கனகபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்கு பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி, சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை, அமாவாசை பூஜை விஷேசமாக நடக்கும். சிவராத்திரி விழாவை விமரிசையாக நடத்த கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் இரவு யாக சாலைகள் அமைத்து மஹா சிவராத்திரிக்கான சிறப்பு வழிபாடுகள் செய்து, வேதங்கள் கூறி நான்கு காலமும் யாகசாலையில் பூஜைகள் செய்யப்பட்டு கலச அபிஷேகம் நடத்தப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன. இதே போல் கருங்குழியில் காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர், ரகோத்தம கோவில் வளாகத்தில் உள்ள ஞான லிங்கேஸ்வரர், மதுராந்தகம் திருவெண்காட்டீஸ்வரர், அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலையின் மீது உள்ள மரகதாம்பிகை உடனுறை பசுபதீஸ்வரர், அனந்தமங்கலம் அகத்தீஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் சிவராத்திரி விழா விமரிசையாக நான்கு கால பூஜைகளுடன் நடந்தது.