பெரிய மாரியம்மன் கோவில் குண்டம் விழா: பூச்சாட்டுதலுடன் தொடங்கியது
ஈரோடு: பெரிய மாரியம்மன் வகையறா கோவில் குண்டம் தேர்திருவிழா, பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கொரோனா பரவல் பாதுகாப்பு நடவடிக்கையாக, ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில் குண்டம் விழா, கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
நடப்பாண்டு விழா நடத்த திட்டமிட்ட சமயத்தில், இரண்டாம் கட்ட கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. இதனால், 15 நாட்கள் நடக்கும் விழா, ஆறு நாளாக குறைக்கப்பட்டது. இதையடுத்து நேற்றிரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. முன்னதாக நேற்று காலை, மூலவர் பெரியமாரியம்மனுக்கு, 16 திரவிய அபிஷேகம் நடந்தது. பூச்சாட்டுதலை தொடர்ந்து இரவு, 9:00மணிக்கு, ஊர்வலமாக பக்தர்கள் கொண்டு வந்த பல்வேறு வகையிலான மலர்களை, கோவில் பூசாரிகள் மூலவருக்கு சாற்றினர். இதை தொடர்ந்து சின்னமாரியம்மன் கோவிலிலும், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவிலிலும் பூச்சொரிதல் நடந்தது. விழாவில், பொதுமக்கள், பக்தர்கள், கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.