வாராகி மந்திராலயத்தில் சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் உள்ள வாராகி மந்திராலய கோவில் வளாகத்தில், புதியதாக கட்டப்பட்டுள்ள சனீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
தமிழக அளவில் மிக உயரமான, 12 அடி உயரம் கொண்ட சனீஸ்வரர் சிலை, இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று மாலை, 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி, நவகிரகம், சனீஸ்வர ஹோமங்கள், வாஸ்துசாந்தி ஆகியன நடந்தன. இரவு, 9:00 மணி அளவில், சிலை பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் நடந்தது. இன்று அதிகாலை, 5:00 மணியளவில் மகா கணபதி பூஜை, வேதிகா அர்ச்சனை ஆகியன நடந்தன. பின்னர், இந்தியாவின் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஸ்ரீ வாராகி மணிகண்ட சுவாமிகள், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, சனீஸ்வரருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. விழாவையொட்டி, அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சனீஸ்வரனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.