நரசிம்ம ஸ்வாமி கோவில் பூமி பூஜை விழா துவக்கம்!
ஓசூர்: ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில், பிரஹலாத நரசிம்ம ஸ்வாமி கோவில் பூமி பூஜை விழாவையொட்டி நேற்று மாலை ஜீயர்கள் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஓசூர் அருகே முத்தாலி கிராமம் சுபாஷ் சந்திரபோஸ் நகரில், கர்நாடகா மாநிலம், சுடீஷம் ப்ராபர்டீஸ் கன்டூர் கிருஷ்ணமூர்த்தி லட்சுமிகாந்த் சார்பில், பிரஹலாத நரசிம்ம ஸ்வாமி கோவில் கட்டப்படுகிறது. மிக பெரிய கோபுரங்கள், சிறப்பு வாய்ந்த சன்னதிகளுடன் கட்டப்படும் இந்த கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நேற்று துவங்கியது. இந்த விழா இரண்டு நாள் நடக்கிறது. முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு சிறப்பு ஹோம பூஜையை, எம்பார் ஜீயர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, சங்கல்பம், ஆச்சார்ய அனுக்கிரகம் மற்றும் நரசிம்மர் பஜனை ஆகியன நடந்தது. விழாவில், திருமலை திருப்பதி ஜீயர் சின்ன கிழவி அய்யப்பன் சுவாமிகள், திருகுருங்குடி ராமானூஜ ஜீயர் சுவாமி, ஆண்டாள் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி சந்நிதி ஜீயர் சுவாமி மற்றும் தமிழக, கர்நாடகாவை சேர்ந்த பல்வேறு ஜீயர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, இரவு ஜீயர்களுடைய பஜனை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பஜனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று 11ம் தேதி காலை 6 மணிக்கு கோவில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, சுடீஷம் ப்ராபர்டீஸ் நிர்வாகி கன்டூர் கிருஷ்ணமூர்த்தி லட்சுமி காந்தன் செய்து வருகிறார்.