உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆதீனம் எங்கே? மடம் பூட்டப்பட்டதா?மக்கள் மத்தியில் பரபரப்பு!

மதுரை ஆதீனம் எங்கே? மடம் பூட்டப்பட்டதா?மக்கள் மத்தியில் பரபரப்பு!

சென்னை: பிடதி நித்யானந்தா தியான பீடம் பூட்டப்பட்டு, "சீல் வைக்கப்பட்டதை அடுத்து, நேற்று மதுரை ஆதீனமும், நித்யானந்தா சீடர்களால் பூட்டப்பட்டு பூஜைகள் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மதுரை ஆதீன கர்த்தர், ஆதீனத்தில் தான் இருக்கிறாரா அல்லது கச்சனம் போய்விட்டாரா என்று நேற்று குழப்பம் ஏற்பட்டது. நித்யானந்தா மீது கடந்த 2ம் தேதி, சென்னையைச் சேர்ந்தவரும், நித்யானந்தாவின் நெருங்கிய பெண் சீடராக இருந்தவருமான ஆர்த்தி ராவ் என்ற பெண், கர்நாடகத்தில் இயங்கி வரும் "சுவர்ணா டிவியில், பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு மதுரையில் பதிலளித்த நித்யானந்தா, மீண்டும் பிடதிக்கு மதுரை ஆதீன கர்த்தருடன் சென்று பேட்டியளித்தார். அப்போது பத்திரிகையாளர்கள் மீது, நித்யானந்தா சீடர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் நித்யானந்தா, அவரது சீடர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதற்கிடையில், பிடதியில் இருந்து தலைமறைவான நித்யானந்தா, மதுரை ஆதீன கர்த்தருடன் சேலத்தில் உள்ள, மூன்று நட்சத்திர ஓட்டலில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் காலையில் அங்கிருந்து புறப்பட்ட நித்யானந்தா, எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.ஆனால், சேலத்தில் இருந்து புறப்பட்ட மதுரை ஆதீன கர்த்தர், நேற்று முன்தினம் இரவு, வைஷ்ணவி, கஸ்தூரி, அவர்களின் தாயார் கமலா ஆகிய மூவருடன் மதுரை மடத்திற்கு திரும்பினார்.

பூஜைகள் நிறுத்தம்: இந்நிலையில், நேற்று மதுரை ஆதீன கர்த்தரைச் சந்தித்து பேட்டி காண்பதற்காக, பத்திரிகையாளர்கள் மடத்திற்குச் சென்றனர். அப்போது அங்கிருந்த நித்யானந்தா சீடர்கள், அவரைப் பார்க்க அனுமதி மறுத்து விட்டனர்.இதையடுத்து, சிறிது நேரத்தில் மதுரை ஆதீனத்தின் பிரதான வாசல் கதவுகள் பூட்டப்பட்டு, பூஜைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ஒரு அறிவிப்புப் பலகையும் வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவலை கேள்விப்பட்ட மதுரை ஆதீன மீட்புக் குழுவைச் சேர்ந்த சோலை கண்ணன், மடத்தின் முன் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக அறிவித்தார். இதனால் பதறிப் போன காவல் துறையினர், உடனடியாக மடத்திற்கு விரைந்து, கதவுகளைத் திறக்கச் செய்து, பூஜைகள் நடத்த வைத்ததாக தகவல் வெளியானது.அதேநேரம், மதுரை ஆதீன கர்த்தர், மடத்தில் இல்லை என்றும், கச்சனத்தில் சென்று தங்கியிருக்கலாம் என்றும் தகவல்கள் பரவின.

உடல்நலம் பாதிப்பு: இதுகுறித்து, நித்யானந்தாவின் மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டிச்செல்வனை தொடர்பு கொண்டபோது, "மதுரை ஆதீன கர்த்தர் மடத்தில் தான் இருக்கிறார். அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவர் பேட்டியளிக்கும் நிலையில் இல்லை. அதேநேரம், நித்யானந்தாவின் நியமனத்தில் அவர் உறுதியாக இருக்கிறார் என்றார். மதுரை ஆதீன கர்த்தருடன் தொடர்பு கொள்வதற்காக அவரது தனிச் செயலர் சொரூபானந்தாவை தொடர்பு கொண்ட போது, "அவர் மதுரை மடத்தில் தான் இருக்கிறார். மடத்தில் பூஜைகள் வழக்கம் போல் நடந்து வருகின்றன. இன்று (நேற்று) பகலில் கூட ஆதீன கர்த்தர் பூஜைகளில் ஈடுபட்டார்; பக்தர்களுக்கு திருநீறு வழங்கினார் என்றார். அதேநேரம், அவருடன் தொலைபேசியில் பேச வேண்டும் என்று கேட்ட போது, தற்போது அவர் பேசும் நிலையில் இல்லை என சொரூபானந்தா மறுத்துவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !