தர்மத்தின் மூச்சு
ADDED :1725 days ago
ராவணனுடன் நடந்த போரில், ராம லட்சுமணருக்கு இக்கட்டான நிலை ஏற்பட்ட போது, சஞ்சீவிமலையை சுமந்து வந்து உயிரளித்தவர் அனுமன். ராமனுடன் நட்பு கொள்ள ராவணனின் தம்பி விபீஷணன் வந்த போது, இது ராவணனின் சதியாக இருக்கும், அவன் உங்களை வேவு பார்க்க அனுப்பப்படுவதாக சந்தேகிக்கிறோம் என சுக்ரீவனும் வானரர்களும் மறுத்தனர். ராமனோ, நல்லவனோ, கெட்டவனோ தன்னைச் சரணடைய ஒருவன் வருகிறான் என்றால், அவனை ஏற்பதே என் பணி என்று தர்மத்தைக் காப்பாற்ற முயன்றார்.
ஒரு வேளை விபீஷணனை ஏற்காவிட்டால், தர்மம் செத்து விடும். தர்மம் செத்தால் ராமனுக்கும் உயிர் இருக்காது. இந்நிலையில், அனுமன் ராமனின் கருத்தை ஆமோதித்துப் பேசினான். பின் அனைவரும் சம்மதிக்க விபீஷணனை சேர்த்துக் கொண்டார் ராமர். இங்கே, ராமனின் மூச்சையே காப்பாற்றியிருக்கிறார் அனுமன். காரணம், அவர் வாயுவின் பிள்ளை அல்லவா!