உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை தேரோட்டம்: எளிமையாக நடந்தது

தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரை தேரோட்டம்: எளிமையாக நடந்தது

தஞ்சாவூர்: கொரோனா பரவலால் தஞ்சாவூர் பெரியகோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா தேரோட்டம், கோவில் உள் பிராகரத்தில் எளிமையாக இன்று (23ம் தேதி ) நடந்தது.தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரைப் பெருந்திருவிழா 18 நாள்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா பொது முடக்கம் காரணமாக இக்கோவிலில் சித்திரைப் பெருந்திருவிழா நடைபெறவில்லை. இதனால், தேரோட்டமும் நடத்தப்படவில்லை. இந்தாண்டு இக்கோவிலில் சித்திரைப் பெருந் திருவிழா கடந்த 8ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது.கொரோனா தொற்று பரவல் இரண்டாவது அலை நிலவுவதால், கோவில் விழாக்களுக்கு அரசுத் தடை விதித்துள்ளது. இருப்பினும்,நிபந்தனைகளுக்கு உட்பட்டு கோவிலுக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கோவில் வளாகத்துக்குள் புறப்பாடு உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் பெரும் திருவிழாவாக இருந்து வந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக, இன்று (23ம் தேதி) கோவிலுக்குள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், தியாகராஜர், கமலாம்மாள் சிறப்பு அலங்காரத்தில், சிறிய தேரில் எழுந்தருளி கோயில் குருக்கள், பணியாளர்களுடன், மிக எளிமையாக தேரோட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !