வீரமாச்சி, கமலகாமாட்சியம்மன் கோவில்களில் கும்பாபிஷேகம்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, நெகமம் வீரமாச்சி அம்மன் கோவில், அங்கலக்குறிச்சி, கமலகாமாட்சி அம்மன் கோவில்களில் (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. பொள்ளாச்சி, பெரிய நெகமம் வீரமாச்சி அம்மன் கோவிலில், புதிதாக கர்ப்ப கிரஹம், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சிற்ப கலாவர்ண கோபுரம் ஆகிய திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதையடுத்து, 14ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. (13ம் தேதி) காலை 9.00 மணிக்கு லட்சுமி கணபதி வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜை, மகா தீபாராதனை, புதிய சிலைகளுக்கு கண்திறப்பு, கிராம பிரகதஷிணம், கோபுர கலசம் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. மாலை 5.00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, யந்திரஸ்தாபனம் ஆகிய நிகழ்ச்சி நடக்கிறது. (14ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 3.00 மணிக்கு கணபதி வழிபாடு, நான்காம் கால யாக வழிபாடு, காலை 5.00 மணிக்கு கலசம் புறப்பாடு, அம்மன் விமானம், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 7.30 மணிக்கு மகா அபிஷேகமும், தசதானமும், கோ பூஜை, மங்கள தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. காலை 9.00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. அங்கலக்குறிச்சி: அங்கலக்குறிச்சியில் அமைந்துள்ள கமலகாமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, இன்று காலை 9.00 மணிக்கு, முதற்கால வேள்வி பூஜை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. மாலை 4.00 மணிக்கு, விமான கலசம் வைக்கப்படுகிறது. மாலை 5.00 மணிக்கு, இரண்டாம்கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை காலை 6.00 மணிக்கு, மூன்றாம் கால யாக பூஜையும், யாகசாலையில் இருந்து கும்பமூர்த்தி, மூலாலயத்துக்கு எழுந்தருளுகிறார். காலை 10.30 மணிக்கு, விமான கும்பாபிஷேகமும், காலை 10.30 முதல் 11.15 மணிக்குள், மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது; பிள்ளையார்பீடம் பொன்மணிவாசக அடிகளார் நடத்தி வைக்கிறார். மதியம் 12.00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது.