மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
1616 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
1616 days ago
சோழப் பேரரசின் மிகப்பெரிய அரசனான, ராஜேந்திர சோழனின் தலைநகரான கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் அகழாய்வில், அரண்மனை சுவர் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிறப்பாகஆட்சி செய்தவன் முதலாம் ராஜராஜன். ராஜராஜனின் மகனாகவும், படைத் தளபதியாகவும் போர்களில் வியூகம் வகுத்து, பல நாடுகளை கைப்பற்றியவன் முதலாம் ராஜேந்திரன். அவன், கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றி பெற்று, கங்கை நீரை ஊற்றி, சோழகங்கம் என்ற ஏரியை, வெற்றிச் சின்னமாக நிர்மாணித்தான். அந்த ஏரி அமைந்த ஊரை, தன் தலைநகராக மாற்றி, கங்கை கொண்ட சோழபுரம் என, பெயரிட்டான்.அரியலுார் மாவட்டத்தில் உள்ள இந்த ஊரில், தமிழக தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு நடந்தது. அதில், சோழர் மாளிகையின் அடித்தளப் பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி முதல், மீண்டும் தமிழக தொல்லியல் துறை சார்பில், அப்பகுதியில் அகழாய்வு துவங்கப்பட்டது. இதுவரை, மூன்று அகழாய்வு குழிகள் தோண்டப் பட்டு உள்ளன. அதில், மூன்றரை அடி ஆழத்தில், செங்கல் சுவர் வெளிப்பட்டது. இந்த சுவர், 10 மீட்டர் வரை நீளமாகச் செல்கிறது. இதே குழிகளில், மேற்கூரையின் ஓடுகள், உடைந்த செங்கற்கள், வட்ட வடிவமான செம்பு நாணயம், இரும்பு ஆணிகள், சீன மண்பாண்டங்கள் உள்ளிட்ட தொல்பொருட்களும் கிடைத்துள்ளன. இது குறித்து, தொல்லி யல் துறை அதிகாரிகள் கூறியதாவது: முதலாம் ராஜேந்திரன் பெற்ற, கங்கை வெற்றியின் அடையாளமாக அமைக்கப்பட்ட நகரம் தான் கங்கைகொண்ட சோழபுரம். ஏற்கனவே, இந்த ஊரில் அகழாய்வு செய்துள்ள மாளிகைமேடு என்ற இடத்தில் தான், தற்போது, அகழாய்வு செய்யப்படுகிறது. இங்கு கிடைத்துள்ள போர்சலன், செலடான் போன்ற சீன மண்பாண்டங்களை, சோழ நாட்டுக்கும், சீன நாட்டுக்கும் இடையே நடந்த வர்த்தகத்துக்கான சான்றாகக் கொள்ளலாம். மேலும், அகழாய்வு செய்யும் போது, புதிய தொல்பொருட்களும், புதிய தகவல்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
1616 days ago
1616 days ago