மழை வேண்டி "பர்ஜன்ய யாகம் நிறைவு : இன்று தலைக்காவிரியில் மஹா ஹோமம்
திருச்சி: பாரதிய கிஷான் சங்கம் சார்பில், தமிழகம், கர்நாடகாவில் மழை பொழியவும், அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டியும், திருச்சி காவிரி ஆற்றில் நடந்து வந்த, "பர்ஜன்ய யாகம் மற்றும் ஹோமம் நேற்று நிறைவடைந்தது. தலைக்காவிரியில் இன்று அல்லது நாளை மஹா ஹோமம், யாகம் நடக்கிறது. திருச்சி மாவட்ட பாரதிய கிஷான் சங்கம் சார்பில், கர்நாடகா, தமிழகத்தில் மழை பொழிய வருண பகவானை வேண்டியும், அரசியல்வாதிகளுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டியும் திருச்சி காவிரி ஆற்றில் மாபெரும், "பர்ஜன்ய சாந்தி ஹோமம் மற்றும், 108 விவசாயிகள் பங்கேற்கும் பட்டினி விரதம் கடந்த 11ம் தேதி துவங்கியது. காவிரி ஆற்றின் நடுவே பெரிய குளம் அமைத்து, வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். இந்த ஹோமம், யாகம் நேற்று நிறைவடைந்தது. "பர்ஜன்ய சாந்தி ஹோமத்தை, தலைமையேற்று நடத்தி வந்த பாரதி கிஷான் சங்க மாநில துணைத் தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது: யாகத்தின் நிறைவு நாளான இன்று (நேற்று) பூர்ணாஹூதி நடந்தது. யாகம் செய்த புனிதநீர் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இந்த புனித நீர் தலைக்காவிரிக்கு கொண்டு செல்லப்படும். நாளை (இன்று) இரவு அல்லது நாளை மறுநாள் காலை தலைக்காவிரியில் இதேபோல, "பர்ஜன்ய யாகம் மற்றும் மஹா ஹோமம் நடக்கிறது. தலைக்காவிரியிலிருந்து மூன்றாவது கி.மீ., தொலைவில் உள்ள பாகமண்டலில், ஆற்றின் நடுவே இந்த யாகம் நடக்கிறது. மழை பெய்தால், கன்னிக்காவிரி அறக்கடளைக்கு சொந்தமான கட்டடத்தில் யாகம் நடக்கும். இதில், வேத விற்பன்னர்கள் உள்பட, 25 பேர் பங்கேற்கின்றனர். யாகம் துவங்கிய அன்றே தலைக்காவிரியில் மழை பெய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சியில் மழை! : திருச்சியில், மூன்று நாட்களாக நடந்த, "பர்ஜன்ய யாகத்தால் தலைக்காவிரியில் முதல் நாளே மழை பெய்ததாக பாரதிய கிஷான் சங்கத்தினர் தெரிவித்தனர். நேற்று மாலை, 5 மணிக்கு, திருச்சியில் லேசான சாரல் பெய்தது. யாகத்துக்கு பலன் கிடைத்துள்ளதாக பாரதிய கிஷான் சங்கத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.