உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்பா ஆஸ்ரமம் மஹா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

ஐயப்பா ஆஸ்ரமம் மஹா கும்பாபிஷேகம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சேலம்: சேலத்தில் உள்ள ஐயப்பா ஆஸ்ரமம் மஹா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

சேலம், சாஸ்தா நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பா ஆஸ்ரமத்தில் நேற்று கும்பாபிஷேகம், ஆலய தந்திரி கேரளா பட்டாம்பி தந்திர ரத்தினம் அழகத்து சாஸ்திர சர்மன் நம்பூதிரிபாட் தலைமையில் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு ராஜ கோபுரத்துக்கு புனித நீர் ஊற்றி, கலசங்களுக்கு குடமுழக்கு செய்யப்பட்டது. தீயணைப்பு துறை வாகனம் மூலம் ஐயப்பா ஆஸ்ரமத்தில் திரண்டிருந்த பக்தர்கள் மீது, புனித நீர் தெளிக்கப்பட்டது. ஐயப்பா கோஷம் எழுப்பி, பலாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமியை வழிபட்டனர்.

கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து, நம்பூதிரிகள், 1,008 கலசபூஜை நடத்தினர். முன் பதிவு செய்து, பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களின் பெயர், நட்சத்திரம், ராசிக்கு சிறப்பு பூஜைகள் செய்து, கலசத்தில் போடப்பட்ட நாணயங்கள், பிரசாதம் வழங்கப்பட்டது. காலை 10 மணிக்கு உச்ச பூஜாவும், மகா தீபாராதனை, அவஸ்ராவா பிரோக்ஷனம், ஸ்ரீபத பலி நிகழ்ச்சி நடந்தது. மாலை 6.30 மணிக்கு மகா தீபராதனையும், பகவதி சேவா நிகழ்ச்சியும். இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொண்டு, வழிபட்டனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஐயப்பா டிரஸ்ட் தலைவர் நடராஜன், உதபதலைவர் மனோகரன், செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் ஜெயக்குமார், இணைச்செயலாளர் ஸ்ரீனிவாசன், சண்முகம் உள்பட நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !