உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் நடை திறப்பு: 19ம் தேதி வரை திறந்திருக்கும்!

சபரிமலையில் நடை திறப்பு: 19ம் தேதி வரை திறந்திருக்கும்!

சபரிமலை : ஆனி மாத பூஜைகளுக்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. பூஜைகள் முடிந்து வரும் 19ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் மாத மற்றும் சிறப்பு பூஜைகளுக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். கடந்த மாத பூஜைகள் முடிந்து நடை அடைக்கப்பட்ட பிறகு, மே 30ம் தேதி, பிரதிஷ்டா (மூலவர் சிலை அமைக்கப்பட்ட நாள்) தினத்திற்காகத் திறக்கப்பட்டது. மறுநாள், பிரதிஷ்டா தின உற்சவம் முடிந்து அன்றிரவு நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து, ஆனி மாத பூஜைகளுக்காக, கோவில் நடையை நேற்று மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி திறந்தார். நேற்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. இன்று (15ம் தேதி) அதிகாலை கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும்.வழக்கமான பூஜைகளைத் தவிர, சிறப்பு பூஜைகளாக, இன்று முதல் 19ம் தேதி வரை உதயாஸ்தமனம், படி பூஜை, சகஸ்ர கலசாபிஷேகம், களபாபிஷேகம் (சந்தன அபிஷேகம்) ஆகியவை நடக்கும். மாத மற்றும் சிறப்பு பூஜைகள் முடிந்து 19ம் தேதி இரவு 10 மணிக்கு, சுவாமிக்கு விபூதி அபிஷேகம் செய்வித்து, ஜபமாலை அணிவித்தும், ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !