உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓங்காரநந்த சுவாமிகள் உடல் தேனியில் ‛சம்ஸ்ஹாரம்

ஓங்காரநந்த சுவாமிகள் உடல் தேனியில் ‛சம்ஸ்ஹாரம்

தேனி: மகா ஸித்தியடைந்த ஓங்காரநந்ந சுவாமியின் புனித உடல், சிறப்பு பூஜைகளுடன், இறைவன் திருவடியில், ‛சம்ஸ்ஹாரம் செய்யப்பட்டது.

தேனி வேதபுரீ சுவாமி சித்பவானந்த ஆஸ்ரம பீடாதிபதி ஓங்காரநந்த சுவாமிகள், 62, மே 3ல் உடல்நலக் குறைவால், மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மாலை, 6:15 மணிக்கு, மாரடைப்பால் மகா ஸித்தி அடைந்தார். இரவில், தேனி ஆஸ்ரமத்திற்கு, சுவாமிகளின் புனித உடல் வந்தது. புதுக்கோட்டை புவனேஸ்வரி கோவில், தேனி குரு தட்சிணாமூர்த்தி கோவிலைச் சேர்ந்த வேத விற்பன்னர்கள், சிவாச்சாரியார்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின், உடல் சப்பரத்தில் ஏற்றப்பட்டு, ஆஸ்ரமத்தை சுற்றி, குருதட்சிணாமூர்த்தி கோவில் எதிரே, நித்ய ஆன்ம சாந்திக்கான சமாதிக்கு கொண்டு வரப்பட்டது. ஆஸ்ரம நிர்வாகி பரசுராமன் இறுதி சடங்குகள் செய்ய, சுவாமிகளின் சீடர்கள், வேத விற்பன்னர்கள், ஆஸ்ரம நிர்வாகிகள் வேத மந்திரங்கள் முழங்க, ஆன்ம நித்ய சாந்தி பூஜைகள் நடந்தன. சுவாமிகள் புனித உடல், அதிகாலை, 3:30 மணியளவில் இறைவன் திருவடியில், சம்ஸ்ஹாரம் செய்யப்பட்டது. தேனி, திண்டுக்கல், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த சீடர்கள் வழிபட்டனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பக்தர்கள் ஒத்துழைத்து, வீட்டிலிருந்தே வழிபட்டு கொள்ளலாம். ஸித்தி அடைந்த சுவாமிகளுக்கு, தொடர்ந்து, 16 நாட்கள் பூஜைகள் நடக்கும் என, ஆஸ்ரம நிர்வாகி நாராயணன் தெரிவித்தார்.

ஹிந்து முன்னணி புகழஞ்சலி: ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஸ்ரீ ஓங்காரநந்த சுவாமிகள், ஸ்ரீமத் பகவத் கீதையையும், திருக்குறளையும், உபநிஷத்துகளையும் பாரெங்கும் பரவ செய்தவர். நமது கால கட்டத்தில், தமிழகத்தின் புகழ்மிக்க வேதாந்த ஆச்சாரியராகவும், ஆன்மிக தலைவராகவும் திகழ்ந்தவர். வேதம் கற்றவர், தமிழில் புலமை பெற்றவர். எல்லா சம்பிரதாயங்களையும் மதிப்பவர். எல்லா சமுதாயத்தினரையும் அரவணைத்து சென்றவர். ஹிந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் மீது, அளப்பரிய நம்பிக்கையும், அன்பும் வைத்திருந்தவர். அவரது இழப்பு, ஹிந்து சமுதாயத்துக்கு ஒரு பேரிழப்பு. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !