ரம்ஜான் கவிதைகள்
மகத்துவமிக்க இஸ்லாமை
தாங்கும் துாண்கள் ஐந்தாகும்
ஒன்றுக்குப் பத்தாய், நுாறாய்
ஆயிரமாய் நன்மைகள் தேட
இறையளித்த வாய்ப்பே ரமலானாகும்!
நோன்பென்பது
தடுத்துக் கொள்ளுலேயாகும்!
உண்ணுதல் பருகுதல்
உடல் இச்சை தவிர்த்தல் வீண்பேச்சு
வீண்கேட்பு வீண்பார்வையாவும் தடுத்து
ஆன்ம சுத்திகரிப்பு நிகழும்
அற்புதப் பயிற்சிக்காலம் இதுவாகும்!
தக்வா எனும் இறையச்சம்
பரிபூரணமாய் நம்மில் பெருக
ஸஹர் துவங்கி இப்தார் வரை
நல்அமல்கள் பல செய்து
தராவீஹ் தொழுகையில்
இரவுதோறும் நிலைநின்று
நன்மைகள் அறுவடை செய்வோம்!
* வாய்க்குப் பூட்டுப்போட்டு
தொண்டையைத் தாழிட்டுக்
கொண்ட பின்
வயிற்றுடன் உரையாடத்
தொடங்கியது ரமலான்.
* வறியவர்களின் பசியை
இயலாதவர்களின்
கையறுநிலையை
துரத்தப்பட்ட ஆத்மாக்களின்
கண்ணீரை
மவுன மொழியில்
துயரம் ததும்பப் பேசியது
* பணிச்சுமைகளிலிருந்து விடுபட்ட
வயிற்றின் பேச்சு
ஆன்மாவுக்குப் புரியப் புரிய
கொடையின் கிளைகள்
வெளியெங்கும் விரிந்து
பசுங்கனிகள் பொழியத்
தொடங்கின.
ஈகையின் வேர்கள்
மனித சஞ்சாரமெங்கும் ஊடுருவிப் பரவின.
* ஈமானுக்கும் இக்லாசுக்கும்இடையே
பரந்து விரிந்திருக்கும்
ஸஹருக்கும் இப்தாருக்கும்
இடையிலான
சூட்சுமப் பெருவெளியில்
பேரருளாளனின் கருணைச்சுடர்
ஒளிர ஒளிர
உலர்ந்த நாவில் ருசிக்கத்
தொடங்கியது
நோன்பின் அருஞ்சுவை!
திறந்தேயிருக்கிறது ரய்யான் கதவுகள்
* தீ நுண்மி காலத்து ஈகை மாதம்
முகங்களுக்கு தான் கவசம்
கரங்களுக்கு இல்லை
கருணைகள் நிறைந்திருக்கும் ரய்யான்
இதயங்களில்எப்போதும்
திறந்திருக்கும் ரய்யான் கதவுகள்
* அளவின்றி அள்ளிக்கொடுக்கும் ஜகாத்துகள்
மறைமுகமாக எழுதிவிடும்
மறுமையின் கணக்குகளை
நம் கண்களிலிருந்து மறைக்கிறது
பிரகாசிக்கும் சுவனத்தின் ஒளி
* முப்பது நாட்களின் அமல்கள்
பெருநாள் தொழுகை முடிந்த
முலாகத்துகளின் ஸ்பரிசங்களில்
பூத்திருக்கும் புன்னகைகளாக
இனி கடந்து போகட்டும்
மனிதம் நேசிக்கும் காலங்களும்.