கோவிலில் கொள்ளை முயற்சி: ரூ.1.15 லட்சம் காணிக்கை தப்பியது
கடலுார்: கடலுார் பஸ் நிலையத்தில் கோவில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் உள்ள நாகம்மன் கோவிலில் நேற்று அதிகாலை அர்ச்சகர் ரவி, பூஜை செய்ய வந்தார். அப்போது கோவில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, மூன்று உண்டியல்களின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றிருப்பது தெரியவந்தது.தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நள்ளிரவு 1:45 மணியளவில், பைக்கில் வந்த இருவர், கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியல்களை உடைக்க முயன்று, முடியாததால் திரும்பிச் சென்றது பதிவாகியிருந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்து, மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர்.கோவிலில் கொள்ளை முயற்சி சம்பவத்தைத் தொடர்ந்து, செயல் அலுவலர் சங்கர் மேற்பார்வையில் கோவிலில் இருந்த 3 உண்டியல்களும் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.அதில் 1.15 லட்சம் ரூபாய் காணிக்கை பணம் இருந்தது. கொள்ளையர்களால் உண்டியல் உடைக்க முடியாததால், காணிக்கை பணம் தப்பியது.பஸ் போக்குவரத்து இல்லாததால் பஸ் நிலையம் ஆள் நடமாட்டமின்றி இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்த துணிகர கொள்ளை முயற்சி நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.