கொரோனா பணிகளில் கோவில்கள் சார்பில் உணவு வினியோகம்
சென்னை: கொரோனா நோய் தடுப்பு பணிகளில் கோவில்கள் சார்பில், ஒரு லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை, அன்னதான திட்ட மைய நிதியிலிருந்து வழங்க, ஹிந்து சமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக, ஏழை மக்கள், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, அன்றாட வாழ்க்கைக்கு போராடி வருகின்றனர். அவர்கள் பசியை போக்க, கோவில்களில் இருந்து, உணவு தேவைப்படுவோருக்கு, உணவு பொட்டலங்கள் வழங்க, அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். அதன்படி இம்மாதம், 12ம் தேதி முதல், கோவில்களில் உணவு தயாரிக்கப்பட்டு, உணவு பொட்டலங்களாக ஏழை மக்களுக்கு வழங்கப்படுகின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஜூன், 5 வரை உணவு பொட்டலங்கள் வழங்க, கோவில் நிர்வாகங்கள் நடவடிக்கை எடுத்துஉள்ளன.இந்நிலையில், 349 கோவில்களில் போதிய நிதி ஆதாரம் இல்லாதது, அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இத்திட்டத்திற்கு, 2.51 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.இந்த நிதியை, ஹிந்து சமய அறநிலைய துறை கமிஷனர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும், அன்னதான திட்ட மைய நிதியில் இருந்து, கோவில்களுக்கு வழங்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.