ஊத்துக்கோட்டை: உருவ ரூபம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சுருட்டபள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவில் சனிப் பிரதோஷ விழா நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது. ஆலகால விஷத்தை உண்ட மயக்கத்தில், சிவபெருமான், அன்னை பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து உறங்கும் கோலத்தில் பக்தர்களுக்கு இங்கு அருள்பாலிக்கிறார். சிவபெருமான் விஷத்தை உண்ட நாள், சனிக்கிழமை என்பதால், சனிப்பிரதோஷம் விசேஷம். இவ்வாண்டின் இரண்டாவது சனிப் பிரதோஷம் நேற்று முன்தினம் சுருட்டபள்ளி பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நடந்தது. வால்மீகீஸ்வரர், மரகதாம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 4.30 மணிக்கு, பிரதோஷ நந்திக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உட்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தன. உற்சவர், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோவிலை, மூன்று முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இவ்விழாவில் திருவள்ளூர், பொன்னேரி, சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.