திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு பேட்டரி கார்கள் நன்கொடை!
நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க வரும் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளி பக்தர்களின் பயண வசதிக்காக சென்னையை சேர்ந்த பக்தர் கிரண்தேவி கொத்தாரி, இரண்டு பேட்டரி கார்களை நன்கொடையாக வழங்கினார்.ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பேட்டரி கார்களையும், அதன் சாவி மற்றும் ஆவணங்களையும் அவர் நேற்று முன்தினம் தேவஸ்தான போர்டின் தலைவர் பாபிராஜுவிடம் வழங்கினார். மொட்டைக்கு கியூ: திருமலையில், பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துமிடத்தில், சவரத் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், மேலும் கூடுதலாக, 300 சவரத் தொழிலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளர்கள் மட்டுமே, இங்கு பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமலையில், பக்தர்கள் தங்கும் வசதிக்காக நந்தகம் என்ற பெயரில், 30 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் விடுதி வளாகம், அடுத்த மாதம் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.