சுசீந்திரம் கோயிலில் பூஜை பொருட்கள் விற்பனை: ரூ.1 கோடிக்கு ஏலம்!
சுசீந்திரம்: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஓராண்டிற்கு விற்கப்படும் பூஜைப் பொருட்களின் விற்பனை உரிமம் ஒரு கோடிக்கு மேல் ஏலம் போனது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் நவக்கிரக மண்டபத்தின் முன் நவக்கிரக எண்ணெய் நவதானிய கிளி, ஆஞ்சநேய சுவாமிக்கு சார்த்தப்படும் வெண்ணெய், பன்னீர், மாலை, பிரசாத கடை, ஆன்மிக புத்தக விற்பனை கடை ஆகியவற்றிற்கு ஆண்டுதோறும் தேவஸம் போர்டு அலுவலகத்தில் ஏலம் விடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் பலத்த போட்டி ஏற்படும் இந்த ஏலத்தில் ஏலத்தொகையும் உயரும். இந்த ஆண்டும் ஏலத்தொகை கடந்த ஆண்டை போல ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமாக ஏலம் போனது. ஏலத்திற்கு தேவஸம் போர்டு இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் பொன் சுவாமிநாதன், கோயில் கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்து ஏலத்தை நடத்தினர். ஏலத்தில் எண்ணெய் கிளி, வெண்ணெய் விற்பனை உரிமம் 52 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய்க்கும், பன்னீர் விற்பனை உரிமம் 14 லட்சத்து 18 ஆயிரத்திற்கும், பூமாலை விற்பனை உரிமம் 12 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், பிரசாத ஸ்டால் உரிமம் 16 லட்சத்து 15 ஆயிரத்திற்கும், பூஜை சாமான் விற்பனை உரிமம் 7 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், ஆன்மிக புத்தக விற்பனை உரிமம் 4 லட்சத்து 31 ஆயிரத்திற்கும் ஏலம் போனது.ஆக மொத்தம் ஒரு கோடியே 7 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு பூஜை பொருட்கள் ஏலம் போனது.