மண்டைக்காடு பகவதி கோவிலில் துணை தேவதை: தேவபிரசன்னத்தில் கண்டுபிடிப்பு
நாகர்கோவில் : மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் துணை தேவதை மண்ணில் புதைந்திருப்பது தேவபிரசன்னம் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டது.
பெண்களின் சபரிமலை என்று புகழப்படும் குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து கேரள மாநிலம் வயநாடு ஜோதிடர் ஸ்ரீநாத், ஆற்றுகால் பகவதி அம்மன் கோவில் முன்னாள் மேல்சாந்தி விஷ்ணுநம்பூதிரி ஆகியோர் தேவபிரசன்னம் நடத்தினர். தீ விபத்திற்கு அம்மனே காரணம். தினப்படி நிவேதனத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும். தந்திரிக்குரிய மரியாதைகள் தரப்பட வேண்டும். நாகர் சன்னதியின் கூரை அகற்றப்பட வேண்டும். அம்மனுக்கு மாதம் ஒரு நாள் மூன்று வேளை பிராமண பூஜை நடத்த வேண்டும். கொடிமரத்தை சுற்றி பலிக்கல் அமைக்க வேண்டும். மூலஸ்தான கூரை அமைக்கும் போது பலா மரத்தின் தடிகளை பயன்படுத்த வேண்டும். மாதம் ஒரு நாள் தேவசம்போர்டு சார்பில் தங்க தேரில் தேவியை அமர்த்தி பவனியாக வரவேண்டும். இவ்வாறு பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர்.
துணை தேவதை: கோவிலில் தேவியுடன் ஒரு யக்ஷி -துணை தேவதை தெரிவதாகவும், அதற்கும் சன்னதி அமைத்து பூஜை நடத்த வேண்டும் என்றும் பிரசன்னம் பார்த்தவர்கள் தெரிவித்தனர். அவ்வாறு இல்லை என தேவசம்போர்டு அதிகாரிகள் மறுத்தனர். அந்த சிலை இருக்கும் இடத்தை பிரசன்னம் பார்த்தவர்கள் கூறினர். அங்கு மண்ணுக்குள் தோண்டியபோது சிலை இருந்தது. சிலை வெளியே எடுக்கப்பட்டது. சன்னதி அமைக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளது.