அவிநாசி கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம்?
அவிநாசி : பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், கும்பாபிஷேகம் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்; கும்பாபிஷேக திருப்பணிகள் விரைவில் துவங்கும் என்கிறது அறநிலையத்துறை. கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மையானது, அவிநாசியில் உள்ள பெருங்கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற இத்தலம், தமிழகத்தில் மூன்றாவது பெரிய தேர் கொண்டது.13 ஆண்டு ஆனதுகடந்த 1980ல், சுவாமிக்கு ஏழு நிலையிலும், அம்மனுக்கு ஐந்து நிலையிலும் ராஜகோபுரம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. பின், 1991 மற்றும் 2008 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் நடந்தது.ஹிந்து ஆகம விதிப்படி, ஒரு கோவிலுக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அவ்வகையில், அவிநாசி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, 13 ஆண்டுகள் ஆகி விட்டது.
சிதிலமடைகிறது: பக்தர்கள் கூறுகையில், திருப்பணிகள் துவங்காததால், கோவிலில் பல இடங்களில், கட்டுமான பணிகள் சேதமடைந்துள்ளன. குறிப்பாக, அபிஷேக நீர் வெளியேறாமல் அடிக்கடி தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. சித்திரை தேர்த்திருவிழாவில் உற்சவமூர்த்திகள் அமர்ந்து வலம் வரும், வாகனங்கள் உரிய பராமரிப்பின்றி சிதிலமடைந்து விட்டது. ராஜகோபுரத்தின் உச்சியில், தேனீக்கள் ராட்சத தேன் கூடு கட்டியுள்ளது. தேன் கூடு கலைந்தால், பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும். இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ளன. ஆனால், அவற்றை நிவர்த்தி செய்ய செயல் அலுவலர் முன் வருவதில்லை. எனவே, கோவிலில் திருப்பணிகளை உடனே துவக்கி, கும்பாபிஷேகம் செய்ய, ஹிந்து அறநிலையத்துறை முன்வர வேண்டும் என்றனர்.
விரைவில் பணிகள்: திருப்பூர் மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் நடராஜனிடம் கேட்டதற்கு, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து, பூர்வாங்க பணிகள் துவங்கி விட்டன. திருப்பணிகள் குறித்து வல்லுனர்களிடம் கருத்து கேட்கப்பட்டு, விரைவில் பணிகள் துவக்கப்படும், என்றார்.