பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் வருடாந்திர பூஜை ஆடல் , பாடலுடன் கொண்டாட்டம்
ஊட்டி: ஊட்டி அருகே எப்பநாடு பீரமுக்கு ஈஸ்வரன் கோவிலில் வருடாந்திர பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஊட்டி அருகே, எப்பநாடு கிராமத்தைச் சுற்றி ஏராளமான படுகரின கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மலை உச்சியில் உள்ள ஈஸ்வரன் கோவில் வருடாந்திர பூஜைக்காக கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான பூஜை இன்று கோவிலில் நடந்தது. காலை , 6:00 மணிக்கு கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து , இருளர் பழங்குடியினரின் இசையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட ஈஸ்வரனை மலை உச்சியில் உள்ள கோவிலில் வழிபட்டு, படுகரின மக்கள் மற்றும் இருளர் பழங்குடியினர் ஆடல் , பாடலுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். காணிக்கை செலுத்தும் நிகழ்ச்சியில் சுற்றுவட்டார படுகரின மக்கள் பங்கேற்று நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதன்பின், அங்குள்ள மலை மீது அமர்ந்து, இயற்கை காட்சிகளை ரசித்து, மாலையில் கிராமங்களுக்கு சென்றனர்.