சித்திரப் பிரகாரமாகி ஜொலிக்க போகிறது ராமேஸ்வரம் மூன்றாம் பிரகாரம!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவில் மூன்றாம் பிரகாரம், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல், முழுவதும் பல வர்ணங்கள் அடங்கிய சித்திர பிரகாரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் மூன்றாம் பிரகாரம், ராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி காலத்தில் துவங்கி, 1794ல் முத்துராமலிங்க சேதுபதியால் கட்டி முடிக்கப்பட்டது. நீளமான பிரகாரத்தில் உள்ள தூண்களின் அமைப்பு, நடைபாதையின் இருபுறமும் உள்ள திண்ணைக்குறடுகள், தூண்களுக்கு இடையே அமைந்துள்ள புராணக்கதைகளை செல்லும் சுதை சிற்பங்களால் உலகப்பிரசித்தி பெற்றது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை பலவர்ண சித்திரங்கள், சித்திர தூண்கள் அடங்கிய பிரகாரமாக விளங்கி வந்தது. நாளடைவில், தூண்களில் இருந்த சிற்பவேலைப்பாடுகள் சேதமடைந்தன. கடந்த 1975 கும்பாபிஷேகத்தின் போது, சுதை சிற்பங்கள் அகற்றப்பட்டு சிமென்ட் கலவையால் பூசப்பட்டு, சாதாரண தூண்களாக மாறியது. தற்போது இந்த பிரகாரத்தில் சேதமடைந்த கமலம் பெயின்டிங் பணிகள் துவங்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்று வரும் நிலையில், பிரகாரத்திலுள்ள சுதை சிற்பங்களை சீரமைத்து, முன்பு போல் சித்திரப்பிரகாரமாக மாற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, 50 லட்ச ரூபாயில் பிரகாரத்திலுள்ள தூண்கள், பக்கவாட்டில் உள்ள சிற்பங்களுக்கு பல வர்ணங்களில் பெயின்ட் பூசப்பட்டு வருகிறது.
தேர்களுக்கு இரும்பு சக்கரங்கள்: ராமேஸ்வரம் கோயிலில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் எழுந்தருள இரண்டு பெரிய மரத்தேர்களும், சுப்ரமணியர், விநாயகர், சண்டிகேசுவரர் உலா வர மூன்று சிறிய மரத்தேர்களும் கோயிலில் உள்ளது. சேதுபதி மன்னர்கள் காலத்தில் செய்யப்பட்ட இத்தேர்களின் மரச்சக்கரங்களில் தேய்மானம் அதிகமானதால், இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்காக, திருச்சி பெல் நிறுவனத்தில் 8 லட்சம் ரூபாயில், 20 சக்கரங்கள் தயாரிக்கப்பட்டு, நேற்று ராமேஸ்வரம் கொண்டு வரப்பட்டன. ஆடித்திருவிழாவிற்கு முன் மூன்று சிறிய தேர்களுக்கும், விழா முடிந்த பின் சுவாமி, அம்பாள் பெரிய தேர்களுக்கும் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட உள்ளன.