உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை: அடிவாரத்தில் வழிபட்ட பக்தர்கள்

கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை: அடிவாரத்தில் வழிபட்ட பக்தர்கள்

 வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டதால், பக்தர்கள் அடிவாரத்தில் வழிபட்டு சென்றனர்.

கோவையில், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. கோவையில், ஆடி அமாவாசையொட்டி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், ஆனைமலை மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆகிய நான்கு கோவில்களில், பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என, கடந்த வாரம் கலெக்டர் சமீரன் அறிவித்திருந்தார். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வழிபாட்டிற்கு தடை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதனையடுத்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அடிவாரத்திலுள்ள படிக்கட்டு கேட் முன் விளக்கேற்றி வழிபட்டு சென்றனர். அதேபோல, பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. கோவிலில், வழக்கம் போல, சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !