உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு மங்கல பொருட்கள்

ஸ்ரீரங்கத்தில் இருந்து ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலுக்கு மங்கல பொருட்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீரங்கம் பெருமாள் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் , ரங்கமன்னாருக்கு மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டது.வருடம் தோறும் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று ஆண்டாள் கோயிலில் பெரியதேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள். இந்நிலையில் கொரோனா நோய் பரவல் காரணமாக தேரோட்ட வைபவம் கோயில் வளாகத்திற்குள் பக்தர்களின்றி நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 3 அன்று கொடியேற்றத்துடன் துவங்கிய இத்திருவிழாவில், நாளை காலை 6:05 மணிக்கு கோயில் வளாகத்தில் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடக்கிறது. இதனை முன்னிட்டு இன்று காலை 11:00 மணிக்கு ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் சார்பில் உதவி ஆணையர் கந்தசாமி, சுந்தர் பட்டர் தலைமையில் ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு பட்டு, வஸ்திரம், மங்கல பொருட்கள் கொண்டுவரப்பட்டது. இதனை கோயில் செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பட்டர்கள் எதிர்கொண்டு வரவேற்றனர். கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலையில் மதுரை அழகர்கோவில் சார்பில் மங்கல பொருட்கள் கொண்டு வரப்பட்டு ஆண்டாள், ரங்கமன்னாருக்கு சாற்றப்பட்டது. 9ம் திருநாளான நாளை காலை பிரம்ம முகூர்த்தத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தங்கத்தேருக்கு ஆண்டாள், ரங்கமன்னார் எழுந்தருள்கின்றனர். பின்னர் 6:05 மணிக்கு கோயில் வளாகத்திற்குள் பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !