திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் அம்மனுக்கு வளைகாப்பு
திருவொற்றியூர்: திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சியை யு டியூப் மூலம் பக்தர்கள் கண்டுகளித்தனர்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும், ஆடி மாதத்தில் அம்மனுக்கு ஆடிப்பூர வளைகாப்பு நிகழ்ச்சி, கோலாகலமாக நடப்பது வழக்கம்.
இம்முறை, கொரோனா பரவலால், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கோவில் உதவி கமிஷனர் சித்ரா தேவி உள்ளிட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
நேற்று முன்தினம் இரவு வடிவுடையம்மன் வசந்த மண்டபத்தில், சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினார். வேதமந்திரங்கள் முழங்க, 16 வகை முளைகட்டிய தானியங்கள், தின்பண்டங்கள் அடங்கிய மூட்டையை வயிற்றில் கட்டி விட்டனர். பின், மங்கல வாத்தியங்கள் முழங்க, அம்மனுக்கு வர்ண வளையல்கள் அணிவிக்கப்பட்டு, வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.