கண்டதேவி கோவில் தேரோட்டம் ரத்து: இணை ஆணையர் தகவல்!
சிவகங்கை : கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் பழுது பார்க்கும் பணிக்காக, ஜூலை 2ல் நடப்பதாக இருந்த, ஆனித் திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டதாக, சிவகங்கை அறநிலைய இணை (பொறுப்பு) ஆணையர் ஜெயராமன் தெரிவித்தார்.சிவகங்கை, தேவகோட்டை அருகே, கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் ஆனித் திருவிழா குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இரவுசேரிநாடு பெரியகருப்பன் அம்பலம், கண்டதேவி ஊராட்சித் தலைவர் முருகன் பங்கேற்றனர். உஞ்சனை, தென்னிலை நாடு அம்பலம் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற நாட்டு அம்பலத்திடம், தேரோட்டம் நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. எனவே, திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெறாது. இதற்கு இரு நாட்டு அம்பலங்கள் ஒத்துழைப்பு தரவேண்டும், என்றனர். இதையடுத்து, கூட்டத்தை முடித்து வெளியேறினர். கண்டதேவி ஊராட்சித் தலைவர் முருகன் கூறியதாவது: ""கடந்த தி.மு.க., ஆட்சியில் தேரோட்டம் நடக்கவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் தேரோட்டம் நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு கருதி, தேரோட்டம் நடத்தாமல் இருக்க, ஒத்துழைப்பு தருமாறு கேட்டனர். இதையடுத்து, மனவருத்தத்துடன் சம்மதம் தெரிவித்தோம், என்றார். இந்துசமய அறநிலைய இணை ஆணையர் (பொறுப்பு) ஜெயராமன் கூறியதாவது: கடந்த நான்கு ஆண்டுகளாக தேர் ஓடாததால், தேரை இயக்குவதில் பாதுகாப்பு இல்லை. இதற்காக, அரசு கடந்த மே மாதத்தில் தேரை புதுப்பிக்க 29 லட்ச ரூபாய் ஒதுக்கியது. இதற்கான பணிகள் விரைவில் துவங்க உள்ளது. இந்த ஆண்டு, ஆனித் திருவிழா, தேரோட்டம் ரத்து செய்யப்படுகிறது, என்றார். கலெக்டர் ராஜாராமன், டி.ஆர்.ஓ., தனபால், எஸ்.பி., தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் கோபிநாத் உடனிருந்தனர்.
பக்தர்கள் ஏமாற்றம்: இக்கோவிலில், நேற்று காலை கொடியேற்றம் நடப்பதாக இருந்தது. ஆனால், பக்தர்கள் காலை 9 மணி வரை காத்திருந்தும், கொடியேற்றம் நடக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இங்கு, 1998ல் வடம்பிடிப்பதில் இருபிரிவினரிடயே பிரச்னை ஏற்பட்டதால், தேரோட்டம் நடக்கவில்லை. கடந்த 2001ல், முதல்வராக ஜெ., வந்தவுடன் போலீஸ் பாதுகாப்புடன் தேரோட்டம் நடந்தது. தி.மு.க., ஆட்சியில், கோவில் கும்பாபிஷேக பணி நடந்ததால், 2007 முதல் 2011 வரை, ஐந்து ஆண்டுகளாக தேரோட்டம் நடக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு (2012) முதல்வர் ஜெ., ஆட்சியிலாவது நடக்கும் என, பக்தர்கள் எதிர்பார்த்திருந்தனர். தேர் புதுப்பிக்கும் பணிக்காக, மீண்டும் ஆறாவது ஆண்டாக, தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது.