10 நாட்களுக்குப்பிறகு... திருச்செந்துார் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் : இலவசமாக முடிக்காணிக்கை
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாட்களுக்குப்பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் கட்டணமின்றி முடிக் காணிக்கை செலுத்தினர்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் , கடந்த 27ம்தேதி ஆவணிதிருவிழா துவங்கி நடந்து வருகிறது . கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் நடந்து வருகிறது. திருவிழா காலங்களில் கடந்த 10 நாட்களாக கோயிலுக்குள், சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு நேற்று கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அதிகாலை 5.30 மணிக்கு விஸ்வரூ தீபாராதனை நடந்தது. மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தன. மேலும் , முடிக்காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு கட்டணம் கிடையாது என எழுதப்பட்டிருந்த சீட்டு வழங்கப்பட்டது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் கட்டணமின்றி முடிக்காணிக்கை செலுத்தி கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். பக்தர்கள் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராட அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வெறிச்சோடி கிடந்தது.