உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னை பார்த்தசாரதி கோவிலில் தொடர்கிறது சர்ச்சை!

சென்னை பார்த்தசாரதி கோவிலில் தொடர்கிறது சர்ச்சை!

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலின் பிரகாரத்தில், நவீன தரைக் கற்கள் பதிக்கப்பட்ட விவகாரம், சூடுபிடித்துள்ளது. கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையை எதிர்த்து, இந்து இயக்கங்கள், கையெழுத்துப் பிரசாரத்தைத் துவக்கியுள்ளன. பல்லவர் காலத்தில் உருவான பார்த்த சாரதி கோவிலில், உள்ளே நுழையும்போது இடப்பக்கம் உள்ள பிரகாரத்தில், ஏற்கனவே உள்ள பழைய கல் தரை மீது, கோவில் நிர்வாகம், நவீன வழு வழு தரையை அமைப்பதற்காக கற்களைப் பதித்துள்ளது. கட்டட கலை பாதிக்கும்: இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். கோவில் நிர்வாகம், பிடிவாதமாக தரைக் கற்களைப் பதித்து விட்டது. அதோடு, அப்பகுதியில் மேற்கூரை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை எதிர்த்து, இந்து முன்னணி, விசுவ இந்து பரிஷத், பக்தர்கள் பேரவை, ஆகிய இந்து அமைப்புகள், நேற்று முன்தினம் முதல், பக்தர்களிடம் கையெழுத்து வாங்கும் பிரசாரத்தைத் துவக்கியுள்ளன. இதுகுறித்து பக்தர்களிடம் கேட்டபோது, "கோவில் நிர்வாகம், இவ்விஷயத்தில், வழக்கத்திற்கு மாறான பிடிவாதத்தோடு இருக்கிறது. பொதுவாக, கோவில்களில் பெரியளவில் யார் நன்கொடை அளித்தாலும் அவர்களது பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்படும். ஆனால், பார்த்தசாரதி கோவில் நிர்வாகம், இதில் வெளிப்படையாகச் செயல்படவில்லை. நவீன தரைக் கற்கள் பதிப்பதால், யாருக்கும் லாபமில்லை. கோவில் கட்டடக் கலை பாதிக்கப்படும் என தெரிவித்தனர். வருவாய் காரணமா? பார்த்தசாரதி கோவிலில் தற்போது திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வைணவ ஆகம விதிப்படி கொடி மரத்திற்கு உட்பக்கம் கோவில் அர்ச்சகர்கள், கோவில் பூஜைகளைத் தவிர, பிற தனிநபர் விசேஷங்களுக்காக, யாகம் வளர்த்து, வழிபாடு செய்யக் கூடாது. இந்தக் காரணத்தால், தற்போது பார்த்தசாரதி கோவிலில், கொடிமரம் அருகிலும், அதற்கு வெளிப் பகுதியிலும் திருமணங்கள் நடந்து வருகின்றன. அதிகரித்து வரும் இத்திருமணங்களை, கோவிலுக்குள் நடத்த அனுமதித்தால், கோவிலுக்கு வருவாய் அதிகரிக்கும் என்பதால், தற்போது பிரகாரத்தில் நவீன தரைக் கற்களை பதிப்பதில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு ஏன்? பார்த்தசாரதி கோவிலில் உள்ள ஒரே திறந்தவெளி இடம் பிரகாரம் தான். இந்த இடத்தில் நவீன வழு வழு தரைக் கற்கள் பதிக்கப்பட்டதால், தற்போது, காலை 7 மணிக்கே வரும் வெயிலில் கூட, கால் வைக்க முடியவில்லை எனில் உச்சிக் காலத்திலும், மாலையிலும் பக்தர்கள் நடமாடக் கூட முடியாமல் போய் விடும். இந்தக் கற்கள் கருப்பு நிறத்தில் இருப்பதால், தண்ணீர் சிந்தியிருந்தால், எந்த இடத்தில் தண்ணீர் சிந்திக் கிடக்கிறது என்பதைக் கூட கண்டறிய முடியாது. இதனால் வயதான பக்தர்கள் மட்டுமின்றி, சிறுவர்கள், மற்ற பக்தர்களும் வழுக்கி விழ வாய்ப்புள்ளது. இவை எல்லாவற்றையும் விட, மூலவர் பார்த்தசாரதி விமானத்தைத் தரிசனம் செய்ய, இந்த ஒரு இடம் தான் இருக்கிறது. இதையும் மூடிவிட்டால், விமான தரிசனம் இனி அறவே கிடைக்காமல் போய்விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !