உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / களை கட்ட துவங்கியது காரைக்கால் மாங்கனி விழா!

களை கட்ட துவங்கியது காரைக்கால் மாங்கனி விழா!

காரைக்கால்: காரைக்காலில் மாங்கனி, கந்தூரி விழா துவக்கத்தையொட்டி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காரைக்காலில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இங்கு, காரைக்கால் அம்மையாரின் வாழ்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு வரும் 1ம் தேதி விழா துவங்குகிறது. முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு, மறுநாள் 2ம் தேதி காரைக்கால் அம்மையார், பரமதத்தர் திருகல்யாணம், 3ம் தேதி சிவபெருமான் பிச்சாண்டவ மூர்த்தியாக வீதியுலா வரும்போது, பக்தர்கள் மாங்கனி வீசும் நிகழ்ச்சி நடக்கும்.பிரசித்தி பெற்ற இத்திருவிழா தொடர்ந்து 30 நாட்கள் நடக்கும். 30 நாட்களும் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்படும். சாலையின் இருபக்கங்களிலும் கடைகள் மற்றும் பந்தல் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல், விழாவின்போது ஊர்வலத்தில் பயன்படுத்தப்படும் பொம்மைகள் மீது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது.கந்தூரி விழா: காரைக்காலில் மற்றொரு பிரசித்தி பெற்ற விழா மஸ்தான் சாஹிப் வலியுல்லா தர்கா ஷெரிப் கந்தூரி விழா வரும் 30ம் தேதி துவங்குகிறது. அன்று, மாலை ரதம், பல்லக்கு வீதி உலாவும், இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஜூலை 9ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதியுலா, இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக் கூடு நடக்கிறது. ஜூலை 12ம் தேதி கொடி இறக்கம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !