திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் இந்திர பெருவிழா தேரோட்டம்
மயிலாடுதுறை;திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது நவகிரகங்களில் புதன் ஸ்தலமாக திகழும் இக்கோவிலின் இந்திர பெருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ம் நாள் திருவிழாவான திருதேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேஸ்வரர், சுவாமி, அம்பாள் 3 தேர்களில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் சுவாமி அம்பாளுக்கு மகா தீபா ஆராதனை காண்பித்தனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவங்கி வைத்தார். பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம் முருகன், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து நிலையை அடைந்தது. வழியெங்கும் பக்தர்கள் அர்ச்சனை செய்தும், ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.