சபரிமலை நடை 16ல் திறப்பு தொடர்கிறது தரிசன முன்பதிவு
சபரிமலை: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை செப். 16ல் திறக்கப்படுகிறது. இதற்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தொடர்ந்து நடக்கிறது.
கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஐந்து நாட்கள் திறக்கப்படும். இதன்படி புரட்டாசி மாத பூஜைகளுக்காக செப். 16ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து ஆழியில் தீ வளர்க்கப்படும். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். செப். 17ம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரரு அபிஷேகம் நடத்துவார். தொடர்ந்து நெய்யபிஷேகம் நடக்கும். பின் கோவில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கணபதி ஹோமம் நடக்கும். தொடர்ந்து வழக்கமான உஷபூஜை களபபூஜை களபாபிஷேகம் உச்சபூஜை மாலையில் தீபாராதனை இரவு அத்தாழ பூஜை நடக்கும். செப். 21 இரவு பூஜைகள் நடந்து 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கொரோனா பாதிப்பு காரணமாக ஆன்லைன் முன்பதிவு வாயிலாக தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். முன்பதிவு தற்போதும் தொடர்ந்து நடக்கிறது. எல்லா நாட்களிலும் தலா 10 ஆயிரம் பேர் தரிசிக்க இடமுள்ளது. முன்பதிவு செய்யும் பக்தர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்துக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை சான்றிதழுடன் சபரிமலைக்கு செல்ல வேண்டும்.