எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா!
மோகனூர்: எஸ்.வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். மோகனூர் யூனியன், எஸ்.வாழவந்தியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் புதிதாக தேர் வடிவமைக்கப்பட்டு கடந்த மாதம் 31ம் தேதி வெள்ளோட்டம் நடந்தது. தொடர்ந்து, கடந்த 14ம் தேதி கம்பம் நட்டு காப்பு கட்டப்பட்டு விழா துவங்கியது. தினமும் காவிரி ஆற்றுக்கு சென்று பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து, கம்பத்துக்கு ஊற்றி ஸ்வாமியை வழிபட்டனர். 24ம் தேதி இரவு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தும், அக்னி சட்டி எடுத்தும், அலகு குத்துதியும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். மதியம் 2 மணிக்கு குமாரபாளையம் காவிரி ஆற்றுக்கு சென்ற, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடி ஊர்வலமாக வந்து, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர்.அன்று இரவு 8 மணிக்கு மாரியம்மன், செல்லாண்டியம்மன் ஸ்வாமிகள் குதிரை வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நேற்று காலை 7 மணிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு, தேரில் ஸ்வாமி எழுந்தருளினார். தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சிறப்பு வாணவேடிக்கையும், வண்டி வேஷமும் நடந்தது. இன்று (27ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கம்பம் பிடிங்கி கோவில் அருகில் உள்ள சிங்காரம் பாலியில் விடப்படுகிறது. மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.