ஈஸ்வரன் கோவில்களில் ஆனி திருமஞ்சன விழா
ஈரோடு: ஈரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சன விழா நடந்தது. ஆண்டுதோறும் ஈஸ்வரன் கோவில்களில், நட்சத்திரத்தில் மூன்று முறையும், திதியில் மூன்று முறையும், நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடப்பது வழக்கம். அன்றைய தினம் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, நடராஜர் அருள் பாலிப்பார். நேற்று ஈரோட்டில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் ஆனி திருமஞ்சன வழிபாடு நடந்தது. ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேற்று காலை 7 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து, 9.30க்கு நடந்த நடராஜர் திருவீதி உலாவில், நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் தனபால் உத்தரவின் பேரில், கோவில் செயல் அலுவலர் ரவி ஏற்பாடுகளை செய்திருந்தார். நட்டாற்றீஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், ஈரோடு திருநகர் காலனி கற்பக விநாயகர் கோவில், பார்க் ரோட்டில் உள்ள சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், மகிமாலீஸ்வரர் கோவில், சோழீஸ்வரர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், சென்னிமலை கைலாசநாதர் கோவில், பெருந்துறை சோழீஸ்வரர் கோவில் உள்ளிட்ட ஈஸ்வரன் கோவில்களில் நேற்று ஆனி திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது.